ஐஸ்வர்யா ராய், மகளை திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்க இது தான் காரணமா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்து மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி தெரிய வந்தது. இதையடுத்து ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை நேற்று திடீர் என்று நானாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஐஸ்வர்யாவுக்கும், ஆராத்யாவுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தான் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் வீட்டில் அவரின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சனுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை. மேலும் அமிதாப் வீட்டில் வேலை செய்யும் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவர்களுக்கு சொந்தமான 4 பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் அமிதாப் வீட்டில் வேலை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. 77 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை.

அமிதாப் மருத்துவமனையில் இருந்து கொண்டு ட்வீட் செய்து வருகிறார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், தொடர்ந்து பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கு தன் பிளாக்கில் நன்றி தெரிவித்துள்ளார்.

அமிதாப் இந்த வயதில் தைரியமாக இருப்பதை பார்த்து ரசிகர்களுக்கு வியப்பாக உள்ளது. அமிதாப் பச்சனுக்கு ஏற்கனவே உடல்நல பிரச்சனை இருப்பதால் தான் கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லாதபோதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன் மகன், மருமகள், பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தது பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ரசிகர்கள் யாகம் நடத்தி வருகிறார்கள்.

பச்சன் குடும்பத்தார் வீடு திரும்பும் வரை யாகத்தை தொடர்ந்து நடத்தப் போவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பச்சன் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மும்பையில் தான் கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. மும்பையில் மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே