நாளை பராஅத் இரவு ; தொழுகைக்காக வெளியே வரவேண்டாம்: டெல்லி ஆளுநர் வேண்டுகோள்

பராஅத் இரவு பண்டிகை முன்னிட்டு நாளை தொழுகைக்காக வெளியே வரவேண்டாம், கோவிட் 19 லாக் டவுனை கடைபிடிக்கவும் என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய உயிர்க்கொல்லியான கரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் 5,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் நோய் தாக்குதலுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில், 576 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய மன்னிப்பு அல்லது பிராயச்சித்த நாளாக அனுசரிக்கப்படும் பராஅத் இரவு நாளை வருவதை முன்னிட்டு தொழுகைக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என டெல்லி துணைத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பராஅத் இரவு தினத்தன்று தொழுகைக்காக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.

கரோனா வைரஸ் லாக்டவுனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், அதற்கு பதிலாக தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

டெல்லி காவல்துறை பொதுமக்களுக்கான பாதுகாப்பு பிரச்சினையில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

கரோனா லாக்டவுன் காலத்தில் எந்தவொரு விதிமீறலையும் துளியும் அனுமதிக்காது. முழுமையான லாக்டவுனை உறுதி செய்வதற்காக விரிவான டெல்லி காவல்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

இவ்வாறு அனில் பைஜால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே