மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தேச நலனுக்கு விரோதமாக ரயில்வே, விமானப் போக்குவரத்து, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட ஐந்து சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இதேபோல, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரயில்வே, வருமான வரி, வேளாண் துறை உட்பட, பல்வேறு துறையைச் சேர்ந்த 10 மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி நாடு முழுவதும் 25 கோடி ஊழியர்களும், அத்துடன், மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
கல்வியை வணிக மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து 60 மாணவர் சங்கங்களும் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி 175 விவசாயிகள் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
அத்துடன், அனைத்து மாநிலங்களிலும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அகில இந்திய வேலைநிறுத்தம் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, வங்கி வர்த்தகம் போன்றவையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்று இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்த பாதிப்பு அதிகமாக இருக்க கூடும் என கூறப்படுகிறது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் சங்கங்களில் தங்களது ஊழியர்கள் குறைந்த அளவே இருப்பதால், தங்களின் வங்கி சேவையில் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகளை தங்கு தடையின்றி இயக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ விடுப்பு தவிர, பிற விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வராத ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என்றும்; இன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.