தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் நிறைவுப் பகுதியான காணும் பொங்கல் இன்று கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

ஒன்றுகூடல் என்பதன் அடிப்படையில் நடைபெறும் காணும் பொங்கலையொட்டி, கடற்கரை, நதிக்கரைகள், அணைக்கட்டுகள், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் இன்று அலைமோதும்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் மெரீனா, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் இன்று பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, குற்றாலம், உதகை ,கன்னியாகுமரி போன்ற இடங்களில் காணும் பொங்கலைக் கொண்டாட குடும்பத்துடன் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில், அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், பாரிமுனை, தாம்பரம், திருவான்மியூர், முட்டுக்காடு, கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று சேலம், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகரங்களிலும், காணும் பொங்கலையொட்டி, குறிப்பிட்ட சுற்றுலா தலங்களில், மக்கள் ஒன்றுகூடி காணும் பொங்கலை கொண்டாடுவர்.

இதையொட்டி, மக்கள் அதிகம் கூடும் இடங்களை இனங்கண்டு, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே