தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை கொண்டுவந்தவர், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர்.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படும் அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாள் இன்று.

குள்ளமான உருவம், கறைபடிந்த பற்கள், கவலையில்லாத் தோற்றம், சீவாத தலை, பொருத்தமில்லாத உடைகள் – அறிஞர் அண்ணாவைப்பற்றி நாவலர் நெடுஞ்செழியன் கூறிய வர்ணனைகள் தான் இவை.

1937இன் தொடக்க காலக்கட்டத்திலும், அதற்கு பின்பும் தமிழ் மொழி அழியும் நிலை ஏற்பட்டபோது, மொழி பிழைத்தால்தான் இனம் பிழைக்கும், நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும் என தமிழ்ச் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தவர்.

தேர்தல் அரசியல் பாதையில் தமிழ்நாடு கண்டெடுத்த மாபெரும் தலைவர்.

தமிழர் என்ற சொல்லால் அனைத்து அடையாளங்கள் மற்றும் பேதங்களை களையும் கனவு அரசியலைத் தமிழர்களுக்குக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்.

அடுக்கு மொழி வசனங்கள் மூலம், மக்களை தன்பால் ஈர்த்த அறிஞர் அண்ணா 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் பிறந்தார். காஞ்சிபுரத்தில் நடராஜன் – பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

நாடகத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு பின்னாளில், திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதக் காரணமாக இருந்தது. ஓர் இரவு, வேலைக்காரி, நல்லதம்பி உள்ளிட்ட திரைப்படங்கள் வாயிலாக, வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பினார்.

இன்றளவும் பேசுபொருளாக இருக்கும் இந்தி எதிர்ப்புக்கு அன்று போராடியவர்களில் அறிஞர் அண்ணாவும் குறிப்பிடத்தக்கவர்.

இந்தி விலங்கினை ஒழித்திட வீரனே விரைந்து வா, தமிழ் அழிக்கும் ஆதிக்கம் இனியும் நீடிப்பதா? மொழியைக் காக்கவும் நாட்டை மீட்டிடவும் விரைந்து வாரீர்! என்று பேசி மக்களிடயே எழுச்சியை உருவாக்கினார்.

தமிழகத்தில் அவர் உருவாக்கிய இருமொழிக் கொள்கை இன்றளவும் தொடர்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முதலில் நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடக் கழகத்திலும் இணைந்த அண்ணாதுரை, கருத்து வேறுபாடு காரணமாக 1949ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற முதலமைச்சராக பொறுப்பேற்றார் அண்ணா.

சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இவரின் காலத்திலேயே நடந்தது.

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட 1969ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே