பாரம்பரிய திருவிழா கொண்டாடிய தோடர் இன மக்கள்!

உதகை அருகே ஏராளமான தோடர் இன பழங்குடி மக்கள் ஒன்றிணைந்து நடனமாடி பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர்.

நீலகிரி மலையில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர், தோடர்,கோத்தர் என 6 பழங்குடியினங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தோடர்கள் 50க்கும் மேற்பட்ட மந்துகளில் வசித்து வருகின்றனர். மந்து என்பது தோடர்கள் வசிக்கக் கூடிய இடமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கும், தாங்கள் மேற்கொள்ளும் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கும் சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என்பதற்காக மொற் பர்த் எனப்படும் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

தங்களின் எருமைகள் நலனுக்காக இஷ்ட தெய்வத்திடம் வேண்டுதல் நடத்துவர்.

இந்த வருடம் தோடர்களின் தலைமை மந்தான முத்தநாடு மந்ததில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதில் அனைத்து தோடர் இன மக்களும் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் பாடல் பாடியும், நடனமாடியும் வழிபாடு செய்தனர்.

கோயில்களுக்கு செல்ல ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு நடத்த முடியும். அதன் பின்னர் பாரம்பரிய நடனத்திற்கு பெண்கள் இணைகின்றனர்.

இதை தொடர்ந்து, அருகில் உள்ள அடையாள்வேல் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்திய பழங்குடியின மக்கள், இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

இறுதியாக தோடர் இன இளைஞர்கள், இளவட்ட கல்லை தூக்கி தங்களது வீரத்தையும், பலத்தையும் வெளிப்படுத்தினர்.

இறுதியாக முதியோர்கள் அவர்கள் முறைப்படி, வலது காலை தூக்கி பெண்களின் தலை மீது வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே