திண்டுக்கல்லில் 25 பைசாவிற்கு பிரியாணி…

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய 25 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் என்றாலே பூட்டு என்று இருந்த காலத்தை, தற்போது திண்டுக்கல் என்றாலே பிரியாணி என்றநிலை காலப்போக்கில் மாறிவருகிறது.

திண்டுக்கல்லில் இளம் ஆடு, சீரகசம்பா அரிசி, விறகு அடுப்பில் சமைப்பது, சமைத்தபின் தம் போடுவது என பல சிறப்புக்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணியை விரும்பி உண்ண ஒரு கூட்டமே உள்ளது.

பல பகுதிகளில் இருந்தும் பயணம் செய்பவர்கள் திண்டுக்கல்லை கடந்து செல்லும்போது பெரும்பாலோனோர் பிரியாணியை ருசிக்காமல் செல்வதில்லை.

அந்த அளவிற்கு திண்டுக்கல் பிரியாணி பலரின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில் மார்ச் 8-ம் தேதியான இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதை சிறப்பிக்கும்விதமாக திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள முஜிப் பிரியாணி என்ற கடையில் 25 பைசா நாணயத்தை கொண்டுவந்து அரை பிளேட் பிரியாணி பெற்றுச்செல்லலாம் என்ற அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இன்று காலை கடை திறந்தவுடன் கூட்டம் அலைமோதியது.

பழைய 25 பைசா நாணயத்தை வைத்துக்கொண்டு பலரும் நீண்டவரிசையில் காத்திருக்க தொடங்கினர்.

முதலில் வந்த 150 பேருக்கு அரை ப்ளேட் பிரியாணி 25 பைசாவிற்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வித்தியாசமான விளம்பரம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த கடையினர், ஏற்கனவே குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து பைசாவிற்கும், 5 திருக்குறள்களை ஒப்புவித்த பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாகவும் பிரியாணி வழங்கினர்.

கீழடியில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் எவ்வளவு முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ, அதேபோல் இனிவரும் தலைமுறைக்கு நாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நாணயங்கள் பயனுள்ளதாகவும், நம் வரலாறு சொல்லும் விதமாகவும் இருக்கவேண்டும்.

இதற்காக எங்கள் தொழில் மூலம் ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் இந்த மாதிரியான யோசனைகள் தோன்றியதாக பிரியாணி கடை உரிமையாளர் ஷேக் முஜீபுர் தெரிவித்தார்.

2 thoughts on “திண்டுக்கல்லில் 25 பைசாவிற்கு பிரியாணி…

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே