வெற்றி யாருக்கு ? நாளை வாக்கு எண்ணிக்கை..!

இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சிப் பதவி இடங்களை நிரப்ப இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

  • முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும்,
  • 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

புகார்களின் அடிப்படையில் 30 இடங்களுக்கு நேற்று முன்தினம் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று 9 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

சீல்வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் 315 வாக்கு எண்ணும் மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் நாளை காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பெட்டிகளின் சீல் உடைக்கப்படும்.

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப்படுகிறது.

இதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே