புதுச்சேரியை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி- சிவசேனா கடும் எச்சரிக்கை

மும்பை: புதுச்சேரியை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், திமுகவின் ஒரு எம்.எல்.ஏ. என மொத்தம் 6 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் செயல்படுத்தப்படலாம் என ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தன. இதனை முன்வைத்து பாஜகவை கடுமையாக எச்சரித்துள்ளது சிவசேனா.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், புதுச்சேரியில் பாஜகவின் தவளைகள், தாமரையை நாடும் வண்டுகளாகிவிட்டன. இதனால் புதுவை நாராயணசாமி அரசு கவிழ்க்கப்பட்டது.

அதே பாணியில் மகாராஷ்டிரா கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் லோட்டஸை செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக அல்லாத மாநில அரசுகளை கலைக்க எம்.எல்.ஏக்களை மிரட்டும் வகையில் மத்திய ஏஜென்சிகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை ஏவிவிடுகிறது பாஜக. பாஜகவின் இந்த அணுகுமுறை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே