நாளை தமிழகத்தில் 240 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 1.17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) மே மாதம் நடப்பதாக இருந்தது.

இது, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 3842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 14 நகரங்களில் 240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1 லட்சத்து 17ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக  தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றோ அல்லது அதற்கான அறிகுறிகளோ இல்லை என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய அதே போட்டோவை தேர்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் போது 50 மிலி சானிடைசரை கொண்டு வர வேண்டும்.

முகக்கவசம் மற்றும் கையுறைகளை மாணவர்கள் அணிந்து வர வேண்டும். அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

அவை அசல் அடையாள அட்டையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு, போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே