திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று உறுதி

திருமலை ஜீயர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்தை ரத்து செய்வது குறித்து தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.

திருமலையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளித்ததிலிருந்து கரோனா தொற்று மெதுவாக பரவ தொடங்கியது.

ஏழுமலையானுக்கு கைங்கரியம் செய்யும் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், மடப்பள்ளி ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என பலர் 150க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 70 பேருக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திருமலையில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏழுமலையான் கைங்கரியங்களை நேரடியாக கண்காணித்து வரும் ஜீயர்களுக்கும் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

அவர்கள் தற்போது சாதுர்மாசிய தீட்சை அனுசரித்து வருவதால், அவர்களை தனிமைபடுத்தி தேவஸ்தானம் உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் அவர்களின் உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது.

அவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவர்களை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கவும் தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அதனால் பக்தர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

ஏழுமலையானுக்கு நடக்கும் நித்திய கைங்கரியங்களில் எவ்வித குறைப்பாடும் இல்லாமல் தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

திருமலை ஜீயர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தானம் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. கூட்ட நிறைவுக்கு பின் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே