கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து..!!

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நிலை மிக மோசமாக இருந்தது.

நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இடமில்லாமல் நோயாளிகள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சாமானிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடினர்.

இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி கொண்ட தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைத் தடுக்க, முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி, சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்சவரம்பை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே