விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ‘துப்பாக்கி 2’ உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கத்தி’ மற்றும் ‘சர்கார்’ ஆகியவற்றிலும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது 4-வது முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையவுள்ளது இந்தக் கூட்டணி. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தப் படம் ‘துப்பாக்கி 2’ ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சிலரோ அது தாணுவின் தயாரிப்பு என்பதால், அதன் 2-ம் பாக உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எப்படி அளிப்பார் என்று சிலர் கேள்வியும் எழுப்பியிருந்தனர்.

தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். ஏனென்றால், ‘துப்பாக்கி’ படத்துக்கு இவர் தான் ஒளிப்பதிவாளர். நேற்று (மே 2) காலை ‘துப்பாக்கி’ படத்தின் முக்கியமான காட்சிகளில் உள்ள விஜய் முகத்தை வைத்து ஒரு பதிவொன்றை வெளியிட்டார்.

இந்தப் பதிவை வைத்துக் கொண்டு, விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் கூட்டணி மீண்டும் ‘துப்பாக்கி 2’ படத்தில் இணைகிறது. ஆகையால் தான் இந்தப் பதிவை சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த தகவலால் விஜய் ரசிகர்களோ பெரும் உற்சாகமாகியுள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 414 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே