சிறப்பு ரயிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைத்து வகை போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது புலம்பெயர் தொழிலாளர்கள்தான். தினக்கூலியை நம்பி சொந்த ஊரை விட்டு மற்ற மாநிலங்களுக்கு சென்ற அவர்கள், ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி இருப்பிடம், போதிய உணவு இல்லாமல் வாடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அந்த புலம்  பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தாலும், சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக உள்ளது. 

இது தொடர்பாக கோரிக்கை விடுத்து வந்த அவர்கள், தற்போது ஊரடங்கு 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாவாசிகளுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், 500 கிலோ மீட்டருக்கு மேலான தூரத்திற்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், ரயில் புறப்பட்ட பின்னர் இடையில் வேறு எந்த நிலையத்திலும் நிற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு ரயில் மூலம் 1,200 பேர் பயணிக்கலாம் என்றும் சிறப்பு ரயிலுக்கான கட்டணத் தொகையை பயணிகளை அனுப்பும் மாநிலங்கள் வசூலித்து ரயில்வேயிடம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பயணிகளும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே