பகைவனுக்கு அருள்வாய்’ அப்டேட்: நடிகர்களான முன்னாள் சிறைக்கைதிகள்

சசிகுமார் நடிப்பில் உருவாகும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தில் முன்னாள் சிறைக்கைதிகள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

அனீஸ் இயக்கத்தில் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு, தற்போதுதான் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் அனீஸ்.

இந்தப் படத்தில் முன்னாள் சிறைக்கைதிகள் சிலர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இந்தப் படத்தில் சிறைக்கைதிகளாகவே இவர்கள் நடிக்கவுள்ளனர்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியுடன் சேர்ந்து சிறை நாடக அமைப்பை அனீஸ் தொடங்கியுள்ளார். அதில் செயலாளராகவும் அனீஸ் இருந்து வருகிறார். சிறைக்கைதிகளுக்கு நாடகப் பயிற்சி அளித்ததன் மூலம் 2016ஆம் ஆண்டிலிருந்து கைதிகள் இயக்குநர் அனீஸுக்குப் பழக்கமாகியுள்ளனர்.

காலிப் பாத்திரத்தை வைத்துத் தானாக வரிகள் போட்டு மெட்டமைத்துப் பாடும் சிறை கானா மணிகண்டன், 2 பட்டப்படிப்பை முடித்து 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்லும் திருக்குறள் கே. முனுசாமி, ஒரு கீபோர்ட் இசைக் கலைஞர், தோலக் இசைக் கலைஞர், அற்புதமான கவிஞர் என இந்த நடிகர் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. இவர்களின் சிறைவாசத்தில்தான் இதில் தேர்ந்திருக்கிறார்கள். இவர்களோடு பழகி, பயிற்சியளித்த சமயத்தில் சிறை உணவையே அவர்களுடன் சேர்ந்து உண்டிருக்கிறார் அனீஸ்.

கலையின் மூலம் மறுவாழ்வு என்கிற நோக்கத்தில்தான் இந்த முயற்சியை தமிழக அரசு முன்னெடுத்ததாகச் சொல்கிறார் முன்னாள் புழல் சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி.

சிறையில் வந்து தங்களைப் பார்க்கும் பலரும் விடுதலையானவுடன் வேலை தருவதாகக் கூறுவார்கள். ஆனால், விடுதலையாகி வந்து அவர்களை அணுகும்போது அவர்களின் பார்வையே வேறாக இருக்கும். இயக்குநர் அனீஸ் தான் சொன்னதைச் செய்திருக்கிறார் என்று நெகிழ்கின்றனர் முன்னாள் சிறைவாசிகள். ஆனால் நடிப்பு வாய்ப்புகளை மட்டுமே நம்பி வாழ வேண்டாம் என்று அனீஸ் இந்தப் புதிய நடிகர் கூட்டத்திடம் கூறியிருக்கிறார்.

“அதுவும் ஒரு வாய்ப்பு என்று நம்பவேண்டாம் என வெளிப்படையாகவே அவர்களிடம் கூறிவிட்டேன். ஒரு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்குக் கையில் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அவர்கள் அலைந்து திரிவதை நான் விரும்பவில்லை. அவர்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு சிறிய அளவு நேரத்தைக் கலைக்காக அவர்கள் செலவிட்டால் போதும். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், முன்னாள் சிறைக்கைதிகளை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையை மாற்றவும்தான் இந்த முயற்சி” என்கிறார் அனீஸ்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே