இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேது. கூலி வேலை செய்யும் இவர் வீட்டின் வெளியே இருந்த கட்டுவிரியன் பாம்பை விரட்டுவதற்குச் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராவிதமாக அந்தப் பாம்பு அவரைக் கடித்துள்ளது.
வலி தாங்காமல் சேது அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு சேதுவை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சேதுவிற்கு முதலுதவி மட்டும் அளித்துவிட்டு மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சேது சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் “உங்களைக் கடித்தது என்ன பாம்பு என்று தெரியுமா?” எனக் கேட்டுள்ளனர்.
உடனே, தான் கையில் வைத்திருந்த பைக்குள் கையைவிட்டு 3 அடி நீளமுடைய பாம்பை எடுத்து இதுதான் தன்னைக் கடித்ததாக மருத்துவரிடம் நீட்டியுள்ளார்.
சேதுவின் இந்தச் செயலை சிறிதும் எதிர்பாராத மருத்துவர், செவிலியர்கள் மற்றும் அங்கிருந்த நோயாளிகள் என அனைவரும் மிரண்டு ஓடியுள்ளனர்.
பின்னர் அது இறந்த பாம்பு என்று சொன்னதும் தான் அருகில் வந்துள்ளனர்.
பின்னர், என்ன பாம்பு கடித்தது என்று தெரிந்தால் போதும்; இப்படி பாம்பையே மருத்துவமனைக்கு எடுத்துவரக்கூடாது என அறிவுரை வழங்கி அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.