காவி உடையில் திருவள்ளுவர் – டிடிவி தினகரன் கண்டனம்..!!

வள்ளுவரை எந்த மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன.

இதனால் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வரும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. 

திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல.

அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது.

வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை.

திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக்கூடாது.

எனவே, தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே