இராமநாதபுரம் அருகே வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணிக்கு மருத்துவமனை சென்று வர காவல்துறையினர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. எனவே ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல உறவினர்கள் ஆட்டோவை அழைத்தனர். ஆனால் தடையை மீறி செல்ல முடியாது என ஆட்டோ டிரைவர் மறுத்துவிட்டார்.
இருப்பினும் கர்ப்பிணி என்பதால் மனம் கேட்காத அந்த ஆட்டோ டிரைவர், திருப்புல்லாணி எஸ்.ஐ. வசந்தகுமாரின் செல் நம்பரை கொடுத்துள்ளார். எஸ்.ஐ. வசந்தகுமாரிடம் பேசிய அந்த பெண்ணின் உறவினர்கள் விவரத்தைக் கூறினர்.
உடனடியாக அவர் ஆட்டோவில் ஏற்றிச்செல்ல அனுமதியளித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஆட்டோ அங்கிருந்து திரும்பிச் சென்றது.
பின்னர் மருத்துவமனையில் கர்பிணிப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர், ‘இது சூடு காரணமாக வந்த வலி. பிரசவ வலி இல்லை, பிரசவத்துக்கு இன்னும் நாட்கள் உள்ளன. எனவே அப்பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வாகன வசதி ஏதும் இல்லாத நிலையில் மீண்டும் எஸ்.ஐ வசந்தகுமாரை தொடர்புகொண்டு மீண்டும் ரெகுநாதபுரத்துக்கு அழைத்து வர உதவும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய எஸ்.ஐ தங்கமுனியசாமியைத் தொடர்புகொண்ட வசந்தகுமார், கர்ப்பிணிப் பெண் தனது வீட்டிற்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து உதவ கேட்டுள்ளார். எஸ்.ஐ தங்கமுனியசாமியும் ராமநாதபுரத்தில் ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து அந்தப் பெண்ணை பாதுகாப்பாக ரெகுநாதபுரம் அனுப்பி வைத்தார்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவமனை வந்து செல்ல வாகன ஏற்பாடு செய்து கொடுத்த காவல் துறையினரின் மனிதாபிமான சம்பவம் பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.