அகமதாபாத் பிட்சில் எந்தப் பிரச்னையும் இல்லை” விக்கெட்டுகளை அள்ளிய இங். வீரர் ஜாக் லீச்!

அகமதாபாதில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டி பிட்சில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஜாக் லீச் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது “ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாள்களை தாண்டி நடைபெற வேண்டும் என்ற விரும்புவேன். என்னைப் பொருத்தவரை பிட்ச் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. இருக்கின்ற பிட்சில் எப்படி விளையாடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே என் கவனத்தில் இருக்கும். அந்த பிட்சில் அஸ்வினும், அக்ஸர் படேலும் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை நிலைகுலையச் செய்தனர் என்பதே உண்மை” என்றார்.

மேலும் பேசிய ஜாக் லீச் “என்னை பொறுத்தவரை கடந்த போட்டியின் பிட்ச் குறித்து எந்தக் குறையுமில்லை. நான் அதிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். எங்கள் அணியினரும் அதைதான் விரும்புகின்றனர். கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்வியில் இருந்து வெளியே வரவே விரும்புகிறோம். இந்திய அணி சிறப்பாக பந்துவீசினார்கள். என்னைப் பொறுத்தவரை பிட்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பிட்சில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே