தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா குறைந்து சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திரையரங்குகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளர்களிடம் பேசியது:

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அதுபற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது.

சட்டப்பேரவைக்குத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டுவரக் கூடாது என்கிற விதி இருப்பதால், சட்டப்பேரவை சபாநாயகர் அவர் அதிகாரத்துக்கு உள்பட்டு அந்தச் சூழ்நிலையில் நடவடிக்கை எடுத்தார். 

நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை.

கரோனா தொற்று என்பது உலகளாவிய பிரச்னை. திரையரங்குகள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றில் அதிகளவில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடும் நிலை இருப்பதால் தற்போது அதைத் திறக்க வாய்ப்பில்லை.

கரோனா தொற்று குறைந்து சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திறக்க வாய்ப்புள்ளது.

திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அரிது.

குறிப்பிட்ட எண்ணிக்கை வைத்து திரையரங்குகளை இயக்க அனுமதி கொடுத்தால் அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும்.

கரோனா தொற்று குறையும்போது இதற்கு சுமூகத் தீர்வு கிடைக்கும்.

காலப்போக்கில் ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து அரசு முடிவெடுக்கும்.

தமிழகத்தில் ஓ.டி.டி. என்பது தமிழகம் மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னை. ஓடிடி-யில் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான சட்டம் எதுவும் இல்லை.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்படத் துறையினர் நலன் கருதி கலந்து பேச வேண்டும்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து முடிவெடுக்க வேண்டும்.

பல ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

ஓடிடி-யில் திரைப்படம் வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல. முத்தரப்பினரும் கலந்துபேச முன்வந்தால் அரசு அதற்கு உதவும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே