அம்மாவின் ஆத்மாவே கங்கணாவுக்குள் வந்து நடிப்பது போல இருந்தது: சமுத்திரக்கனி பேச்சு

அரவிந்த்சாமியால் எம்ஜிஆரோடு 40 நாட்கள் பயணிக்கும் பாக்கியம் கிட்டியது என்று நடிகர் சமுத்திரக்கனி பேசியுள்ளார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவி’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

நேற்று (மார்ச் 22) ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சமுத்திரக்கனி பேசியதாவது:

”இப்படத்தில் நடித்ததைப் பெரும் ஆசிர்வாதமாக நினைக்கிறேன். ஜாம்பவான்களுக்கு மத்தியில் நானும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் விஜய் என்னிடம் 1000 பக்கப் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். நள்ளிரவு 2 மணிக்குப் புத்தகத்தைப் படித்து முடித்து அவருக்கு போன் செய்து இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்களா? என்று வியந்தேன். இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று கேட்டேன். உங்களால் முடியும் நீங்கள் நடியுங்கள் என்றார்.

எம்ஜிஆரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். என் அண்ணன் அரவிந்த்சாமியால் எம்ஜிஆரோடு 40 நாட்கள் பயணிக்கும் பாக்கியம் கிட்டியது. ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டால் அதற்கு எந்த அளவுக்கு உழைக்கமுடியுமோ அந்த அளவுக்கு உழைக்கும் ஒரு மனிதர் அவர்.

கங்கணாவின் முன்பு நின்று நடிப்பதற்கே பயமாக இருக்கும். பல நேரங்களில் அம்மாவின் ஆத்மாவே உள்ளே வந்து நடிப்பது போல இருந்தது”.

இவ்வாறு சமுத்திரக்கனி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே