ஊர்மக்களின் எதிர்ப்பை மீறி மனுத்தாக்கல் செய்த பட்டியலினப் பெண்..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மலைக்கிராம மக்களின் எதிர்ப்பை மீறி வேட்புமனு தாக்கல் செய்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராவது உறுதியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட மலைக்கிராமம் நாயக்கனேரி. இந்த ஊராட்சி 9 வார்டுகள் கொண்டது. இந்த ஊராட்சிக்கு சென்ற முறை வரை மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை பட்டியலின பெண்கள் போட்டியிடும் தொகுதியாக ஒதுக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர்.

இந்த நிலையில் மலைக்கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, பட்டியலினத்தை சேர்ந்த பியூலா, இந்துமதி ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை வேட்புமனு பரிசீலனையின்போது பியூலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாவது உறுதியாகி உள்ளது.

எதிர்ப்புகளை தாண்டி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைய இருந்த கடைசி நேரத்தில் இந்துமதி ஓடி வந்து தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே