முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 23 -ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று, பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரைக் கொலை செய்துவிட்டு, சில பொருள்களைத் திருடிச் சென்றது. அடுத்தடுத்த பரபரப்பு திருப்பங்களுடன் ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை, தற்போது சூடு பிடித்திருக்கிறது.
கொட்டும் மழையில் கடந்த மாதம் 17-ம் தேதி ஊட்டியில் தொடங்கப்பட்ட கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை ஒரு மாதத்தைக் கடந்தும் ஓயாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கனகராஜின் மரணத்துக்குப் பின் முதன்மை குற்றவாளியாக காவல்துறையால் சேர்க்கப்பட்டுள்ள சயானின் 2 மணி நேர பரபரப்பு ரகசிய வாக்குமூலம் ஏற்படுத்திய களேபரத்தோடு தொடங்கிய கூடுதல் புலன்விசாரணையில் சாட்சிகள் , குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது.
கூடுதல் விசாரணை என்ற பெயரில் கிட்டத்தட்ட மறுவிசாரணையைப் போல தனிப்படையினரால் நடத்தப்பட்டுவரும் இந்த புலன்விசாரணையின் போக்கைக் கண்டு அதிமுகவின் முக்கிய புள்ளிகள் முதல் அப்போது கோத்தகிரி ஸ்டேஷனில் இருந்த கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் கலக்கத்தில் உள்ளனராம்.
கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்து அதன் விசாரணை நடைபெற்று வரும் இரண்டாவது மாதத்தில் கொடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். தினேஷின் தற்கொலை பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் கிளப்பினாலும் சாதாரண தற்கொலை வழக்காகவே அப்போது சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கையும் தற்போது மறுவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து 8,9-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகிய இருவரையும் கேரளாவில் இருந்து வரவழைத்து ஊட்டியில் நேற்றுமுந்தினம் 10 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இரண்டாவது நாளாக நேற்றும் அவர்களிடம் 5 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்தனர். பிஜின்குட்டி மற்றும் சதீஷன் ஆகிய இருவரிடமும் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களிடம் இரண்டு நாளாக விசாரணை நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், “மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை அறிக்கையாக பெறப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை சம்பவம் நடத்தப்பட்ட விதம் குறித்து முழுமையாக தகவல் பெறப்பட்டுள்ளது. அதனாலேயே அவர்களிடம் இராண்டு நாள்கள் விசாரணை தேவைப்பட்டது. சில முக்கிய தகவல்களும் பெறப்பட்டுள்ளது. அடுத்த நபர்களிடமும் விசாரணை தொடரும்” என்றார்.