சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில்தர ஆணை – உச்ச நீதிமன்றம்

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள் .

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. 36,000 எண்ணிக்கையைக் கடந்து கரோனா தொற்று உள்ளது.

சென்னை 26,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்து தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக உள்ளது.

அதிலும் சென்னையில் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் கரோனா தொற்று 2,000 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிச் செல்கிறது.

அதிலும் ராயபுரம் மண்டலத்தில் தொற்று எண்ணிக்கை 4,405 ஆக உள்ளது.

இந்நிலையில் ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள 35 சிறுவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானதை அடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் குழந்தைகள் இல்லத்தில் 35 சிறுவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இல்லத்தின் விடுதிக் காப்பாளருக்கு இருந்த கரோனா நோய்த் தொற்றால், சிறுவர்களுக்கும் தொற்று பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு (சுகாதாரத்துறை செயலாளர்) பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் குழந்தைகள் இல்லத்தில் கரோனா வைரஸ் பரவுவது தொடர்பான நிலை அறிக்கையை அளிக்கவும் சுகாதாரத்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இல்லத்தில் உள்ள பிற குழந்தைகளைக் காக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே