மாணவிகள் விடுதி அறையில் ஒருநாள் முழுவதும் தங்கியிருந்த மாணவர்

பிரபல அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியர் அறையில் கட்டிலுக்கு அடியில் ஒருநாள் முழுவதும் பதுங்கியிருந்த மாணவரை, கல்லுாரி பாதுகாவலர்கள் கையும் களவுமாக பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவின் நுஜிவீடு பகுதியில் ராஜீவ்காந்தி யுனிவர்சிட்டி ஆஃப் நாலெட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இதில் ஆறாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியர் விடுதியில் குறிப்பிட்ட மாணவியின் அறைக்கு ஒரு மாணவன் அடிக்கடி வந்து செல்வதை மாணவியின் தோழியர் கவனித்துள்ளனர்.

பலமுறை சொல்லியும் மாணவியும், மாணவனும் கேட்காததால் இருவரையும் கையும் களவுமாக பிடித்துக் கொடுக்கத் திட்டமிட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை மாணவியின் அறைக்கு அந்த மாணவன் சென்றுள்ளார்;

அதை வெளியில் இருந்து பார்த்த மாணவியின் தோழியர் கதவை வெளியில் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். பின்னர் விடுதி பாதுகாவலர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

பாதுகாவலர்கள் வந்து பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்றனர். அங்கு மாணவி மட்டும் இருந்துள்ளார். வேறு யாரும் இல்லை. எனினும் பாதுகாவலர்கள் விடுவதாக இல்லை.

ஒவ்வொரு கட்டிலையும் துாக்கிப் பார்த்தபோது ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவன் பதுங்கியிருந்தார்.

வெளியில் வந்த அவரிடம் பாதுகாவலர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவன், மாணவி இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.

மாணவியின் அறைக்கு மாணவன் ஏன் சென்றார் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது.

இதற்கிடையே மாணவனை பாதுகாவலர்கள் தேடும் செல்போன் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து வீடியோவை வெளியிட்ட பணியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே