தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று மாலை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு

நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தற்போது இது ஒடிசாவில் பாரதீப் பகுதியில் இருந்து சுமார் 1100 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வரும் 18ம் தேதிக்கு பிறகு மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாக உள்ள இந்த ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளத் தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இன்று பரவலாக மழையும் ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் ஒடிசா, மேற்குவங்க பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக கடல் பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு 16,17 தேதிகளிலும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு 17,18 திதிகளிலும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 19,20 திதிகளிலும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

புயலால் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புயல் உருவாகும் நிலையை குறிக்க தென்கடலோர துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே