சென்னையில் 9 நாட்கள் பயிற்சியைத் தொடங்கியது ஆர்சிபி அணி

14-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்காகச் சென்னையில் 9 நாட்கள் பயிற்சியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று தொடங்கியது.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மைதானத்தில் அடுத்த 9 நாட்களும் ஆர்சிபி அணியினர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்தப் பயிற்சியில் இதுவரை யஜுவேந்திர சஹல், வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ், ஹர்சல் படேல், ஷான்பாஸ் அகமது, பவன் தேஷ்பாண்டே, முகமது அசாருதீன், ராஜ் பட்டிதர், சச்சின் பேபி, சுயஷ் பிரபுதேசாய், கே.எஸ்.பரத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மற்ற வீரர்கள் தங்களின் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்தபின் இந்தப் பயிற்சியில் இணைவார்கள். இந்தப் பயிற்சியில் வியாழக்கிழமை கோலி இணையவுள்ளார். 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் பயிற்சியில் ஈடுபடுவார். அணியின் இயக்குநர் மைக் ஹெசன், பயிற்சியாளர் சைமன் கேடிச் ஆகியோர் தலைமையில் பயிற்சி நடக்கிறது.

இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிவிப்பில், “ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்கு 9 நாட்கள் பயிற்சி முகாம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விளையாட்டு மையத்தில் நடக்கிறது.

அனுபவமுள்ள பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ஸ்ரீராம் ஸ்ரீதரன், ஆடம் கிரிப்பித், சங்கர் பாசு மற்றும் மாலோலன் ரங்கராஜன் ஆகியோருடன் அனைத்து வீரர்களும் சேர்ந்து பணியாற்ற இந்தப் பயிற்சி உதவும். வீரர்களுக்கு உடற்தகுதி, உடற்பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் சங்கர் பாசு வழிகாட்டலில் நடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது ஆர்சிபி அணி. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே