மதுரையில் கந்துவட்டி செலுத்தவில்லை எனக்கூறி குடியிருந்த வீட்டை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை தத்தநேரியை சேர்ந்த குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு கடனாக இரண்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே மூன்று லட்சம் ரூபாய் செலுத்திய குமார், தொடர்ந்து கடனை செலுத்த முடியவில்லை என நாகராஜிடம் கூறியுள்ளார்.
இதற்கு இன்னும் 7 லட்சம் ரூபாய் தர வேண்டியதுள்ளது என்ற நாகராஜ், குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 11-ந் தேதி குமார் வெளியூர் சென்றிருந்தார். அவரது மனைவியும் அருகில் இருந்த ரேசன் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு நாகராஜ் தனது ஆட்களுடன் வந்து, குமாரின் வீட்டை இடித்துள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்கும்போது, தன்னிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி வீடு முழுவதையும் இடித்துள்ளார்.
இதனையடுத்து குமார் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை நேரில் சந்தித்து குமார் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில், நாகராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.