அரசின் வழிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றியதால் கோவையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிசாமி பாராட்டு!

தமிழக அரசின் நடவடிக்கையால், கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ள திட்டங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார்.

166 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

பிறகு பேசிய முதல்வர் பழனிசாமி, நான் சேலத்துக்கு மட்டும்தான் முதல்வர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

இப்போது கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றாலும் ஸ்டாலின் குறை கூறுவார்.

இதுவரை ஒரு ஆக்கப்பூர்வ யோசனையையும் ஸ்டாலின் கூறியது இல்லை என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் பேசினார்.

இன்று (25.6.2020), தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரையில், கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய், அரசின் வழிகாட்டுதல்களின்படி, எந்தளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். சென்னைக்கு அடுத்து, கோவைதான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதிகமான மருத்துவமனைகள் உள்ள மாவட்டம் கோவை மாவட்டம். உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளைக் கொண்டதும் கோவை மாவட்டம் தான்.

அதனடிப்படையில், கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 10 பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு சார்பாக நாள் ஒன்றுக்கு 2,000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுவரை, சுமார் 37,095 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, கரோனா வைரஸ் சோதனையின் மூலமாக பாசிடிவ் உள்ளவர்கள் பூரண குணமடைவதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, இன்றையதினம் 219 நபர்கள்தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதோடு, அரசு மற்றும் தனியார் சார்பாக சுமார் 3,026 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கோவை மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்காக 3-வது குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதற்கட்டமாக 166 கோடி ரூபாயில் பில்லூரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, டெண்டர்விடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. நில எடுப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, குறித்த காலத்தில் கோவை மாநகர மக்களுக்கு நிலையான தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

சேலத்தை விட அதிகமான பாலப் பணிகள் கோவை மாவட்டத்தில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு சொல்கிறேன்.

மேலும், கோவை மாநகரத்தில் அதிக நீளமுள்ள பாலங்கள் கட்டுவதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதினாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய காரணத்தினாலும், போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு மாநகரமாக உருவாக்க வேண்டுமென்பதற்காகத்தான் தமிழக அரசால், இவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல, நவீன பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம்- கோவை மாநகரத்திற்குள் அதிக வாகனங்கள் வருவதை தவிர்ப்பதற்காக மேற்குப் புறவழிச் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலேயே அதிகமான பணிகள் நடைபெறுகின்ற மாவட்டம் கோவை மாவட்டம்.

பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, குடிசை மாற்று வாரியம் என அனைத்துத் துறைகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவட்டம் கோவை மாவட்டம் தான்.

கோவை மாவட்டம் டெக்ஸ்டைல், விவசாயம் என அனைத்து வளங்களும் நிறைந்த ஒரே மாவட்டமாக இருக்கின்ற காரணத்தினால், இங்கே அதிகமானவர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அனைத்து வளங்களும் பெற்ற கோவை மாவட்டத்திற்கு, அரசால், அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்திற்குத்தான்அதிகமான நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியையும் இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.

அதிகமான கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மாவட்டம் என்று சொன்னால் அது கோவை மாவட்டம் தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அரசு அறிவித்த திட்டங்கள் முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே, கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் இந்த மாவட்டத்தில் பணிபுரிகின்ற அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் மனமார, உளமார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே