கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 34ஆயிரத்து723கோடி ரூபாய் மதிப்பிலான 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கோவை கொடீசியா வளாகத்தில், ”முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 மற்றும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், சுமார் 34ஆயிரத்து723கோடி ரூபாய் முதலீட்டில் 52 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க வழிவகை செய்யப்படுவதோடு, 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.வி.எஸ்., டால்மியா பாரத் கிரீன் விஷன் லிமிட்டெட், அதானி எண்டர்பிரைசஸ், ஷெல் இந்தியா மார்க்கெட்ஸ், மில்கி மிஸ்ட், hindustan unilever லிமிட்டெட், Ultratech Ciment லிமிட்டெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் தகவல் தரவு மையம், மின் வாகன தயாரிப்பு, சிமெண்ட் உற்பத்தி, தொழிற்பூங்கா, ஜவுளி உற்பத்தி, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆகியவை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு, 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 485கோடி ரூபாய் முதலீட்டில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, 13ஆயிரத்து413 கோடி ரூபாய் முதலீட்டில் 13 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூவாயிரத்து928கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியுள்ளதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, கொடீசியா வளாகத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே