தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் ஏப்ரல் முதல் அமல் : அமைச்சர் காமராஜ்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது பேசிய அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்கள், எந்த கடையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக, உள் மாநில பெயர்வுதிறன் (INTRA-STATE PORTABILITY) திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது எனவும், அம்மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடைகளில் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மின்னணு குடும்ப அட்டைகள் இல்லாத குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண் கொண்டு ஒருமுறை கடவு சொல் (OTP Number) உதவியுடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொதுவிநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நியாயவிலைக்கடையில் அரிசி பெற்ற குடும்ப அட்டைத்தாரர்கள் அடுத்த நியாயவிலைக்கடையில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே