சென்னையில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 

இந்தியாவில் இதுவரை 164 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கும்; டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது சென்னையில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அயர்லாந்தில் இருந்து கடந்த 17ம் தேதி சென்னைக்கு வந்த 21 வயது இளைஞரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையுடன், கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே