தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் என பலரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தியேட்டர் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:

  • திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் திரையரங்குகள் செயல்பட அனுமதியில்லை.
  • ஒவ்வொரு பார்வையாளருக்கும் இடையே 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திரையரங்கு வளாகத்திற்குள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்,
  • கைகளால் தொடாமல் பயன்படுத்தக்கூடிய சானிடைசர்களை நிறுவ வேண்டும்.
  • பொது இடத்தில் பார்வையாளர்கள் எச்சில் உமிழக்கூடாது
  • அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
  • திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முக கவசம் அணியாதவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கக்கூடாது.
  • திரையரங்கிலிருந்து வெளியேறும்போது, வரிசையாக மக்கள் செல்வதை முறைப்படுத்த வேண்டும்.
  • குளிர்சாதனங்களில் தட்ப வெப்ப நிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும்.
  • திரையரங்கிற்குள் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்குவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே