பனை மர உச்சியில் உயிருக்கு போராடிய நபர்: தோல்வியில் முடிந்த முயற்சிகள்!

தமிழகத்தில் பதனீர் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியின் திருச்செந்தூரை அடுத்த விஜய நாராயணபுரத்தை சேர்ந்தவர் நடேசன்(வயது 63). இவர் கிருஷ்ணுகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து பனை தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பதனீர் இறக்குவதற்காக நேற்று காலை பனை மரம் ஒன்றில் ஏறியுள்ளார், நீண்ட நேரம் ஆகியும் கணவரை காணாமல் நடேசனது மனைவி தேடிச் சென்றுள்ளார்.

அப்போது பனைமரத்தின் உச்சியில் பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் நடேசன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சக பனை தொழிலாளி ஒருவர் மேலே ஏறி அவரை மீட்க முயன்ற நிலையில் அவரால் முடியவில்லை, உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பனை மரத்தில் ஏறும் அளவுக்கு பயிற்சி இல்லாததாலும், ஸ்கைலிப்ட் என்ற அடுக்கு ஏணி வசதி கொண்ட மீட்பு வாகனங்கள் இல்லாததாலும் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது. தனித்தனி ஏணிகளை கயிறு கட்டி மீட்டு வர சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலானது, உயிருக்கு போராடிய நடேசனை மூர்ச்சையான நிலையில் உடலில் கயிற்றை கட்டி மெல்ல கீழே இறக்கினர்.

கீழே வந்ததும் முதலுதவி அளிக்கப்பட்ட போதும் எவ்வித பலனும் இல்லை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே