ஊரடங்கு முடியும்வரை தனியார் முகவர்களின் பால் விநியோகம் முழுவதுமாக நிறுத்தமா…???

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், காவல்துறையினர் பால் எடுத்து செல்லும் தனியார் வாகனங்களை பிடித்து கெடுபிடி செய்வதாக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனையும், விநியோகமும் பிற்பகல் 2.00மணி வரை செயல்படத் தடையில்லை எனத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் காவல்துறையினரோ 12.00மணிக்கே கடைகளை மூடச் சொல்லி மிரட்டுவதும், “கடைகளைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்று 15 நாட்கள் கழித்து வா” என அலைகழிப்பதும், பால் விநியோகம் செய்யும் முகவர்களின் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்வதும் எந்த வகையில் நியாயம்?
மேலும் ஒவ்வொரு பகுதிகளில் உள்ளே செல்லும் பிரதான சாலைகளைச் சவுக்கு கம்புகளால் கட்டி நிரந்தர தடுப்பு வேலி அமைத்து விடுவதால் பால் விநியோகம் செய்ய வரும் பால் நிறுவனங்களின் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதிப்படும் சூழல் நிலவி வருகிறது. அது குறித்து கேள்வி எழுப்பினால் காவல்துறையினர் தாக்க வருகின்றனர், மரியாதையின்றி நடத்துகின்றனர்.

பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையினர் தரும் இன்னல்களை பால் முகவர்கள் ஓரளவிற்குத் தான் சகித்துக் கொள்ள முடியும். இந்நிலை தொடருமானால் பால் விநியோகம் செய்வதை ஊரடங்கு முடியும் வரை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற இருக்கும் இணையத்தள கூட்டத்தில் (Zoom Meeting) முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனியார் பால் விநியோகம் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு முடியும் வரை பால் விநியோகத்தை நிறுத்துவது குறித்து இன்று அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பால் விநியோகத்தை நிறுத்தினால் 15 லட்சம் லிட்டர் பால் சென்னையில் மட்டும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே