நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மனித கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனித கழிவுகளை அள்ளுதல், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது தேவையான கையுறைகள், தலைகவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனவும் அருண்குமார் மிஸ்ரா அறிவுறுத்தி உள்ளார். இந்த கடிதத்தை மத்திய அமைச்சரவையின் அனைத்து துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.