காதலனுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பிய பெண். காரணம் தெரியனுமா?

காதலில் தோல்வி அடைந்தவர்கள் மன உளைச்சல் அடைந்து பலநேரம் வன்முறையைக் கையாள்கின்றனர். அது தவறு என தெரிந்தும், தெரியாமலும் பலர் பல வகையில் வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள ஜிபோ பகுதியில் இளம்பெண் ஒருவர் காதலில் தோல்வி அடைந்ததை அடுத்து தன்னுடைய முன்னாள் காதலனின் வீட்டுக்கு பழிவாங்கும் விதமாக 1,000 கிலோ வெங்காயத்தை அனுப்பியுள்ளார்.

மே 20ம் தேதி சீனாவில் காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். ஜிபோ பகுதியைச் சேர்ந்த ஜாவோ என்ற பெண் தன்னுடைய காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்திருக்கிறார். ஆனால் திடீரென இருவருக்கும் பிரேக்-அப் ஆனதால் அந்தப் பெண் மிகவும் மனமுடைந்து அழுது தீர்த்திருக்கிறார்.

ஆனால், காதல் முறிவு ஏற்பட்டதற்கான எவ்விதச் சலனமும் இல்லாமல் முன்னாள் காதலன் இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்த ஜாவோ கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் அழுவதை நிறுத்திய ஜாவோ, தன்னைப்போல அவனும் அழவேண்டும் என நினைத்து முன்னாள் காதலனின் வீட்டுக்கு 1,000 கிலோ வெங்காய மூட்டையை அனுப்பியிருக்கிறார்.

அதோடு, ஒரு ஆடியோ மெசேசையும் விடுத்திருக்கிறார். அதில், “உன்னைப் பிரிந்ததில் இருந்து தொடர்ச்சியாக 3 நாட்களாக நான் அழுதுகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நீ ஒருதுளி கண்ணீர் கூட சிந்தவில்லை. ஆகவே இது உன்னுடைய நேரம். நான் அழுதது போல் நீயும் அழ வேண்டும்.” என கூறியிருக்கிறார்.

ஜாவோவின் முன்னாள் காதலன் அந்த வெங்காய மூட்டைகளையும், ஜாவோவின் ஆடியோவையும் கேட்டு திகைத்துப் போயிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சீன ஊடகத்திடம் பேசியுள்ள ஜாவோவின் முன்னாள் காதலன், ஜாவோ எதையையும் மிகைப்படுத்தி பேசுவதை பழக்கமாக கொண்டவள். நான் அழவில்லை என்பதற்காக மோசமானவனா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வெங்காய மூட்டையால் குடியிருப்புவாசிகள் துர்நாற்றம் வீசுவதாக ஜாவோவின் காதலன் மீது புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே