திமுகவில் தனக்கு மரியாதை இல்லாததால்தான் வெளியில் வந்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று (மார்ச் 31) செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
திமுக வேட்பாளர் எழிலனை நடிகர் சத்யராஜ் ஆதரித்துள்ளாரே?
ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என, பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதை எங்கும் குறிப்பிடாமல், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் முன்னிறுத்துவது ஏன்?
பாஜக தேர்தல் வாக்குறுதிகளைச் சொன்னால்தான் புரியுமா? எங்களை திமுக என்று நினைத்துவிட்டீர்களா? நிச்சயம் அமல்படுத்துவோம். மிகப்பெரிய கூட்டணிக் கட்சியாக அதிமுக உள்ளது. அதனால், அதைத்தான் பேசுவோம். இங்குள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு 60% ஒத்துழைப்பு கொடுத்தால்தான் செயல்படுத்த முடியும்.
‘தமிழகத்தில் தாமரை மலரும்’ என்ற ட்வீட்டில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரத்தின் படத்தைப் பயன்படுத்துவது அவசியமா?
அவசியமில்லை. சிறிய தவறு அது. இம்மாதிரியான தவறுகள் பல முறை நடக்கும். புகைப்படத்தை மாற்றிப் போடுவது திமுகவிலும் பல முறை நடந்துள்ளது. அதில் தவறில்லை. அவ்வளவு பெரிய குற்றமில்லை. நேற்று இரவே நீக்கிவிட்டோம். ஸ்ரீநிதியை நாங்கள் அழகான நடனக் கலைஞராகப் பார்க்கிறோம். கலை ரீதியாகப் பார்க்கிறோமே தவிர, பாஜகவா காங்கிரஸா என்று பார்க்கவில்லை. கலை எந்தக் கட்சியையும் சார்ந்தது கிடையாது. கலை பொதுவானது. எனவே, பயன்படுத்தினோம். அதில் அவருக்கு ஆட்சேபனை இருந்ததால் உடனே எடுத்துவிட்டோம்.
ஏன் பாஜக வேட்பாளர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எந்தச் சுவரொட்டியிலும், நோட்டீஸிலும் பயன்படுத்தவில்லை?
ஒரு பக்கமாகப் பார்த்தால் அப்படித்தான். எல்லாப் பக்கமும் பார்க்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளாரே?
அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவர் ரஜினியிடம் சென்றுவிட்டு மீண்டும் வரவில்லை. அப்போதே வணக்கம் சொல்லிவிட்டோம்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?
குடிநீர், சாக்கடை, பட்டா பிரச்சினைகள் உள்ளன. சாலை வசதி, நூலகம் இல்லை. கண் தெரியாத 10 வயது மாற்றுத்திறனாளி குழந்தை, சாலை இல்லாததால் கஷ்டமாக இருக்கிறது என என்னிடம் கூறினார். சாலை போடுவது அவ்வளவு கஷ்டம் இல்லை. நானும் இரு குழந்தைகளுக்குத் தாய்தான். குழந்தைகள் கேட்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இந்தத் தொகுதியை திமுகவின் கோட்டை என திமுக சொல்கிறது. ஆனால், திமுக மக்களுக்காக என்ன செய்தது? அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லையென்றால் எதற்கு எங்கள் ஏரியா எனச் சொல்கிறார்கள்.
திமுகவிலிருந்து இப்போது பாஜகவில் உள்ள கு.க.செல்வம்தானே இத்தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார்?
அவரை வேலை செய்ய விடாததால்தான் வெளியே வந்துள்ளார். பாஜக, அதிமுகவை திமுகவினர் எதிரிக்கட்சி என்கின்றனர். நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர்க்கவில்லை. அதிமுகவிலிருந்து இங்கு எம்எல்ஏவாக இருந்த வளர்மதி நல்ல திட்டங்களைக் கொடுத்தார்.
பெண்களைத் தொடர்ந்து திமுக தலைவர்கள் அவமதித்துப் பேசுகிறார்களே?
பெண்களை அவமதிப்பதும், இழிவாகப் பேசுவதும் திமுகவுக்குப் புதிதல்ல. அதை மாற்றவே முடியாது. திமுகவிலிருந்து வந்தவள் நான். மரியாதை இல்லாததால்தான் வெளியில் வந்தேன்.
இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.