குரானை எரித்த தீவிர வலதுசாரி அமைப்பு: பற்றி எரியும் சுவீடன்

சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது போலீஸ்.

போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல் எரிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

மேலும் குரான் எரிக்கப்பட்ட அதே இடத்தில் போராட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

என்ன நடந்தது?

தீவிர வலதுசாரி டென்மார்க் அரசியல்வாதியான ராஸ்முஸ் பலுடான் குரான் எரிப்பு பேரணியை முன்னெடுத்தார்.

அவரை கலந்து கொள்ள விடாமல் போலீஸார் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.

ஆனால், அவர் ஆதரவாளர்கள் இதனை பொருட்படுத்தாமல் குரான் எரிப்பு பேரணியை நடத்தினர்.

பலுடான் ஸ்வீடனுக்குள் நுழைவதை டென்மார்க் எல்லையில் தடுத்த போலீஸார், அவர் சுவீடனில் நுழைய இரண்டு ஆண்டுகள் தடை விதித்தனர்.

இனவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக டென்மார்க் கடும்போக்கு ஸ்ட்ராம் குர்ஸ் கட்சியின் தலைவரான ராஸ்முஸ் பலுடானுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் டென்மார்க் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

அவர் இஸ்லாமிற்கு எதிராக சமூக ஊடகங்களில் காணொளி பகிர்ந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்தியாவில் “We are with Swedan” என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேகுடன் 8 ஆயிரத்துக்கும் அதிகமான ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

News Source : BBC Tamil

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே