மதவெறி அரசியல் செய்கிறது திமுக : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேனி எம்.பி. ரவீந்திரநாத் தாக்கப்பட்ட போது தமிழகத்தில் மதக்கலவரம் வந்துவிடக்கூடாது என்பதாலேயே அமைதி காத்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தேனி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இடைக்கால தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா பதவியேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தேனி ஆவின் இடைக்கால தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார்.

தமிழ்நாடு அட்வகேட் ஜென்ரலின் அறிவுரை படி, ஆவின் ஆணையர் உத்தரவுப்படி தான் ஓ.ராஜா பதவிவேற்றுள்ளார்.

இதுவரை ஆவின் ஒன்றியத்தலைவர் பதவியேற்பு விழாவில் நான் கலந்துகொண்டதில்லை.

எங்க ஊர் ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவிற்கு கூட நான் போகவில்லை.

ஆனால், நேற்று இரவு, ஓ.ராஜாவின் அன்புக் கட்டளையை ஏற்று இங்கே வந்துள்ளேன். பத்து பதினைந்து நாளில், தேனி ஆவினில் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்ட வாய்ப்புள்ளது.

தமிழக கேரள மாநிலத்தை இணைக்கும் மாவட்டம் தேனி. இங்கே பால் உற்பத்தி அதிகமாக உள்ளது.

சரியான தலைவர் இருந்தால், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை கூட்டலாம் என அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

தற்போது ஓ.ராஜா பொறுப்பில் வந்துள்ளார். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உள்ள குடும்பம் ஓ.பி.எஸ் குடும்பம்.

பிறருக்கு தீங்கு செய்யாத, கெடுதல் செய்யாத ஆட்சி தான் ஆன்மீக ஆட்சி. இன்று தமிழகத்தில் எடப்பாடி − ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெறுவதும் ஆன்மீக ஆட்சி தான்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓ.ராஜா பதவியேற்றதில் எந்த சர்ச்சையும் இல்லை. நீதிமன்றம் சொன்ன விதிகளின் படி பதவியேற்றுள்ளார்.

கம்பத்தில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரை தாக்க வந்தவர்களை, எங்களால் தடுக்கவும் தெரியும், அவர்களது கைகளை முறிக்கவும் தெரியும்.

மதக்கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்.

மக்களிடையே மதவெறியை தூண்டி அரசியல் செய்து வருகிறது திமுக. நடந்து முடிந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் திமுகதான்.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூலைச்சலவை செய்து வருகிறது திமுக. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக மற்றும் காங்கிரஸ் தான் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே