மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒருநாள் உணவு செலவு ரூ.460 -ஆக நிர்ணயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு ரூ.460 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை காலை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு அதிகபட்சம் ரூ.460 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. அதிகமாக வசூலிக்கப்பட்ட மருத்துவர், செவிலியருக்கான தங்கும் அறை வாடகையும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா நொய்த்தொற்றின் முதல் அலையின்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு உணவு தொகையாக ரூ.600 செலவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் முறைகேடு ஏதேனும் நடந்ததுள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நீட் தேர்வு பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு நீட் தேர்வு விலக்கு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே