ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உட்பட 3 பேர் பரிதாப மரணம்..!!

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் இருந்து கர்ப்பிணி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்ஸின் டயர் வெடித்தால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணியின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில், கர்ப்பிணி பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கர்ப்பிணி பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண்ணான ஜெயலட்சுமி, உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் இறந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று பேரின் உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பெண் உதவியாளர் படுகாயமடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே