கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை உடன் இருந்த மருத்துவரே புதைக்க வேண்டிய அவலம்…

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மண்டை உடைந்ததால், அவசர அவசர அவசரமாக உடன் வந்த மருத்துவரே குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் உடலை புதைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநர் இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வாங்கி உள்ளனர்.

ஆனால் தகவல் தெரிந்து அங்கு மக்கள் கூட்டம் இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, கீழ்ப்பாக்கம் கல்லறை செல்லமால் நேரடியாக வேலப்பாங்காடு சுடுகாட்டிற்கு சென்று விட்டனர்.

அங்கும் தகவல் தெரிந்து மக்கள் கூடியதால் பிரச்சனை ஏற்பட்டது.

கொரோனா தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் வெகு சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கற்கள், கம்பு ஆகியவற்றுடன் வந்து ஆம்புலன்ஸை உடைத்து ஓட்டுநர்களை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களை தாக்கியதாக உடன் சென்ற மருத்துவர் பிரதீப் தெரிவித்தார்.

ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்தோம், பிழைத்தோம் என ஈகா திரையரங்கு வரை ஆம்புலன்ஸை ஓட்டி வந்துள்ளனர்.

அதற்கு மேல் ஓட்டுநர்களால் ஓட்ட முடியாததால் படுகாயம் அடைந்த அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அந்த மருத்துவர் PPE பாதுகாப்பு ஆடையை தானே அணிந்து கொண்டு, உடனிருந்த இரண்டு உதவியாளர்களுடன் மீண்டும் ஆம்புலன்ஸ் வேளங்காடு மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படலாம் என்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.

அவசர அவசரமாக யாரும் வருவதற்கு முன்னால், இறந்த மருத்துவரின் உடலை அவரே புதைத்துள்ளார்.

உடலை மூட மண் அள்ளிப் போட ஜே.சி.பி இயந்திரம் இயக்க யாரும் இல்லாததால் கையாலேயே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

பிறகு அருகில் இருந்த காவலர் உதவியுடன் மண்வெட்டி கொண்டு மண்ணை போட்டு மூடி அவசர அவசரமாக மீண்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பல உயிர்களை காப்பாற்றிய ஒரு மருத்துவமனையின் இயக்குநரை மருத்துவராக பார்க்காவிட்டாலும், ஒரு மனிதனாகவாவது பார்க்க வேண்டும் என்று அவரது உடலை புதைத்த மற்ற மருத்துவர் கண்ணீர் மல்க கூறினார்.

இதற்கிடையே,  ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கியதாக 20 பேரை அண்ணா நகர் போலீசார், இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல், சட்டவிரோதமாக தடுப்பில் வைத்து தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே