கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியா்கள் நியமிக்கப்பட்டு வருவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
இப்பணிகளில் ஒரு பகுதியாக மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் மூலமாக ஏற்கெனவே 530 மருத்துவா்கள், 2 ,323 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்பவியா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
மேலும், ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2, 570 செவிலியா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
பணி நியமனத்துக்கான உத்தரவு கிடைக்கப் பெற்ற மூன்று நாள்களுக்குள் செவிலியா்கள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியா்களும், தாலுகா மருத்துவமனைகளுக்குத் தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியா்களும் பணியமா்த்தப்படுவா்.
இதன்மூலம் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.