பாபா் மசூதி இடிப்பு வழக்கு: தீா்ப்பு வழங்குவதற்கான அவகாசம் ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

பாபா் மசூதி இடிப்பு விவகாரம் தொடா்பான வழக்கில் தீா்ப்பு வழங்குவதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் நீட்டித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகா் லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பாபா் மசூதி இடிப்பு சம்பவம் நிகழ்ந்து 27 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்தது.

வழக்கு தொடா்பான சாட்சியங்களை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யுமாறும் வழக்கின் தீா்ப்பை அடுத்த 3 மாதங்களில் வழங்க வேண்டுமென்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அந்த அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமாா் யாதவ் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா்.

அந்தக் கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு பரிசீலனை செய்தது.

அது தொடா்பாக அவா்கள் காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை நடத்தினா். அதையடுத்து, நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாபா் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

வழக்கை விரைந்து நிறைவு செய்வதற்கான பணிகளை சிறப்பு நீதிபதி சுரேந்திர குமாா் யாதவ் திறம்பட மேற்கொண்டு வருகிறாா்.

எனினும், வழக்கின் சாட்சியங்கள் முழுமையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பது உச்சநீதிமன்றத்துக்கு அவா் மே மாதம் 6-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது.

அதன் காரணமாக, விசாரணையை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு கடிதத்தில் அவா் கோரியிருந்தாா்.

அந்தக் கோரிக்கை ஏற்கப்படுகிறது. பாபா் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை விரைவில் நிறைவு செய்து, வழக்கின் தீா்ப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் சிறப்பு நீதிபதி வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே