சாத்தான்குளத்தில் காவலில் இளைஞர் மகேந்திரன் மரணமடைந்த விவகாரத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை

சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, அந்த இளைஞரின் தாயாரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மற்றொரு இளைஞர் உயிரிந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (28) என்பவர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாகச் கூறி, அவரது தாய் வடிவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த புகார் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று தொடங்கினர்.

புகார் அளித்த மகேந்திரனின் தாய் வடிவு தூத்துக்குடி கேவிகே நகரில் உள்ள தனது மகள் சந்தனமாரி (மகேந்திரனின் சகோதரி) வீட்டில் தங்கியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை 4 மணியளவில் அந்த வீட்டுக்கு வந்தனர்.

ஆனால், அப்போது வடிவு வீட்டில் இல்லை. இதையடுத்து வீட்டில் இருந்த மகேந்திரனின் சகோதரி சந்தனமாரியிடம் சிபிசிஐடி போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீஸார் இன்று மாலை 3.30 மணியளவில் மீண்டும் சந்தனமாரி வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வடிவு வீட்டில் இருந்தார். இதையடுத்து மகேந்திரன் மரணம் தொடர்பாக அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடந்த மே மாதம் 23-ம் தேதி இரவு மகேந்திரனை கைது செய்ய வந்த போலீஸார் யார், அப்போது என்ன நடந்தது, 24-ம் தேதி இரவில் அவரை விடுவித்த போது என்ன நிலையில் வீட்டுக்கு வந்தார், அவர் ஜூன் 13-ம் தேதி எப்படி இறந்தார், எங்கே இறந்தார் என்பன போன்ற விபரங்களை கேட்டு, வடிவு அளித்த வாக்குமூலங்களை சிபிசிஐடி அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

இந்த விசாரணை 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. விசாரணையின் போது வழக்கறிஞர்கள் ராமசாமி, ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே