சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியதாக தகவல்..!!

ஏறத்தாழ ஒரு வாரக்காலமாக சூயஸ் கால்வாயில் சிக்கித் தவித்திருந்த சரக்கு கப்பல் தற்போது மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் 163கி.மீ நீளம் கொண்ட சூயஸ் கால்வாயில் ஏறத்தாழ ஒரு வாரக்காலமாக சிக்கித் தவித்திருந்த மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர்கிவன் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு தற்போது மீண்டும் நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளது.

சராசரியாக 300மீட்டர் அகலம் கொண்ட இந்த கால்வாயில் எவர்கிவன் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் தவறுதலாக சிக்கிக்கொண்டது.

இந்நிலையில் உலகின் பரபரப்பான இந்த நீர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தரை தட்டிய கப்பலை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் நீரில் வெற்றிகரமாக மிதக்கவிடப்பட்டது.

இந்த பணியை இஞ்ச் கேப் ஷிப்பிங் சர்வீஸ் என்கிற நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த தகவலை எகிப்தின் லெத் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், சூயஸ் கால்வாயை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

முன்னதாக, 400மீட்டர் நீளமுள்ள இந்த சரக்கு கப்பலால் 396க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த கால்வாயில் பயணிக்க முடியாமல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே