கோவையில் திருடிச் சென்ற பைக் கூரியரில் வந்தது

கோவை மாவட்டம் சூலூரில் திருடு போன பைக், கூரியரில் வந்த சம்பவம் உரிமையாளருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 34. இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ் தனது பைக்கை கம்பெனி முன்பு நிறுத்தியிருந்தார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தனது பைக் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்து பார்த்தார்.

அதில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் சென்றது பதிவாகி இருந்தது.

இதனால் தனது பைக் திருடப்பட்டதை உறுதிப்படுத்திய சுரேஷ், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர் அப்பகுதியில் டீ மாஸ்டராக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய வேறு எந்த தகவல்களும் தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று (மே 30) சூலூர் கூரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அதில், அவரது பெயருக்கு கூரியர் வந்துள்ளதாக கூறியதால், அங்கு சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

திருடுபோன தனது பைக் கூரியரில் வந்ததால் ஆச்சரியமடைந்த சுரேஷ், கூரியர் கட்டணத்தை செலுத்தி தனது பைக்கை எடுத்து வந்தார்.

திருடு போன பைக், கூரியரில் வந்த சம்பவம் சுரேஷிற்கு அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் தந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே