அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் ஒருவர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அயோத்தி வழக்கில் இன்று இறுதிவாதம், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.
இந்து மகா சபா சார்பில், மூத்த வழக்கறிஞர், விகாஸ் சிங், இன்று உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை ஆரம்பிக்கும்போது, குணால் கிஷோர் எழுதிய AYODHYA REVISITED புத்தகத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்றார். புத்தகத்தையும் சமர்ப்பித்தார்.
இந்த புத்தகத்தில் 1810ம் ஆண்டின் அயோத்தி மேப் பற்றிய விவரம் இடம் பெற்றுள்ளது. அதில் ராமர் அயோத்தியில் பிறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக விகாஸ் சிங், தெரிவித்தார்.
ஆனால் சன்னி வக்ஃப் வாரியத்தின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அந்த புத்தகத்தை சமர்ப்பிக்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
புதிதாக எந்த ஆதாரத்தையும், இந்த வழக்கில் சமர்ப்பிக்க கூடாது என்றார்.
மேலும், தன் எதிர்ப்பைத் தெரிவிக்க, அவரிடம் ஒப்படைத்த புத்தகத்தின் பக்கங்களை தவான் கிழித்து எறிந்தார். இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும். இப்படி வாதம் நடைபெற்றால், நாங்கள் நீதிமன்றத்திலிருந்து எழுந்து சென்றுவிடுவோம் என்றார்.
இதனால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வாதம் மீண்டும் ஆரம்பித்தது.