அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை ராமாபுரம் தோட்டத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது எம்.ஜி.ஆர் பெயரை முன்னிறுத்தி வரும் கமல்ஹாசன், அதிமுகவின் கருத்தை பொருட்படுத்தாமல் தொடர் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

எம்.ஜி.ஆர் மடியில் உட்கார்ந்து வளர்ந்தவன் என்ற முறையில் அவரின் பெயரை உபயோகிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது என விமர்சிப்போருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ராமாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “காலத்தை வென்றவன்” என்ற ஆவணப்படத்தை கமல்ஹாசன் வெளியிட்டார்.

 அதன் பிறகு உரையாற்றிய கமல்ஹாசன், எம்ஜிஆரின் மீட்சி தான் நான்; விதை நான் போட்டது என்பது சிவாஜியின் வசனம் மட்டுமல்ல அது எம்ஜிஆருக்கும் ஆனது தான் என்று கூறினார்.

மேலும், அவரது ஆசீர்வாதத்தில் தோன்றிய இந்த அதிமுக அரசு விஸ்வரூபம் படத்தின் போது என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தது. அதற்காக ஒரு சில திட்டங்களையும் வகுத்தது.

எம்ஜிஆர் இருந்திருந்தால் அவை ஏதும் நடந்து இருக்காது. அச்சமயம் ரசிகர்கள் அவர்களது வீட்டின் பத்திரத்தையும் சாவியையும் எனக்காக அனுப்பி வைத்தார்கள்.

அன்று எனக்கு எம்ஜிஆர் நினைவு வந்தார் என்று கூறி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே